தேர்தல் துளிகள்: 13 மார்ச் 2021

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

 

தமாக 2 தொகுதியில் காங்கிரஸ்ஸுடன் நேரடி மோதல்!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். திரு.வி.க.நகர் (தனி)– கல்யாணி, ஈரோடு கிழக்கு– யுவராஜா, லால்குடி– தர்மராஜ், பட்டுக்கோட்டை– என்.ஆர்.ரங்கராஜன், தூத்துக்குடி- விஜயசீலன், கிள்ளியூர்– ஜுட் தேவ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதில் திமுகவுடன் 4 தொகுதிகளிலும் 2 தொகுதிகளில் காங்கிரஸ்ஸுடன் தமாக மோத உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் அண்ணன்-தம்பி நேரடி மோதல்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நின்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முக்கிய பிரபலங்கள் வென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக சார்பில் அண்ணன் மகாராஜன் நின்றபோது அவரை எதிர்த்து அதிமுக சார்பில் உடன்பிறந்த தம்பி லோகிராஜன் களம் இறக்கப்பட்டார். ஆனால் இத்தேர்தலில் அண்ணன் (திமுக) மகாராஜன் வெற்றிப் பெற்றார். தற்போது ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் நேரடியாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மோத உள்ளனர்.

அமமுக- எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி வரும் சட்டமன்ற தேர்தலுக்காக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இத்தேர்தலில் எஸ்டிபிஐக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் அந்த 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, பாளையங்கோட்டை- கட்சி தலைவர் நெல்லை முபாரக், ஆம்பூர்- அச.உமர் பாரூக், ஆலந்தூர்- எம்.முகம்மது தமீம் அன்சாரி, மதுரை மத்தியத் தொகுதி- ஜி.சிக்கந்தர் பாட்ஷா, திருவாரூர்- ஏம்.ஏ.நஸிமா பானு, திருச்சி மேற்கு – ஆர்.அப்துல்லா ஹஸ்ஸான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.