தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறையினர் தீவிரமாக எடுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து அங்கு நேரடியாக சுற்றுப்பயணம் செய்து, இதுகுறித்த ஆலோசனைகளை நடத்த தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தென்மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை செய்ய உள்ளார்.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கலெக்டர்கள், எஸ்பிக்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் ஆலோசிக்கிறார்.

மேலும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட மாற்றுப்பாலத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.