சென்னைக்கு யுனெஸ்கோவால் கிடைத்த பெருமை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு சென்னையை கிரியேட்டிங் சிட்டீஸ் என்று கூறப்படும் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. சென்னைக்கு பெருமை சேர்த்த யுனெஸ்கோ அமைப்புக்கும், சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

2004ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு படைப்பாற்றலை ஒரு காரணியாக  கொண்டு நிலையான வளர்ச்சியை எய்திட “படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பை” உருவாக்கியது. பல்வேறு சிறப்புகளுக்காக உலகெங்கிலும்  இதுவரை 180 நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இசைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதை பாராட்டி யுனெஸ்கோ  அமைப்பு “சிறந்த படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு” பட்டியலில் சென்னையை தற்போது சேர்த்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த  மகிழ்ச்சி அடைகிறேன். 

இதற்காக யுனெஸ்கோ அமைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசைத்துறையில் சென்னையின் வளர்ச்சியையும்,  முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ அமைப்பு பாராட்டி அங்கீகரித்திருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். சென்னை வாழ் மக்களுக்கும்,  அனைத்து இசைத்துறை கலைஞர்களுக்கும், இத்தருணத்தில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்