ரூ.1000 கொரோனா நிதி கொடுத்த சிறுவனிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ 1000 கொடுத்த இரண்டாம் வகுப்பு சிறுவனுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் பேசி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஹரீஷ்வர்மன் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கடந்த 3 ஆண்டுகளாக சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வந்தார். அந்த பணம் ரூபாய் 1000 சேர்ந்த நிலையில் தற்போது அந்த பணத்தை கொரோனா தடுப்பு நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடனே அந்த சிறுவனுக்கு புத்தம் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த சைக்கிளை மதுரை சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள் சிறுவனை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் மொபைல் போன் மூலம் முதல்வருடன் அந்த சிறுவனை பேச வைத்தார்.
முதல்வருடன் பேசிய அந்த சிறுவன் சைக்கிள் வாங்கி கொடுத்ததற்கு நன்றி தாத்தா என்று கூறினார். அதற்கு பதில் கூறிய முதல்வர் அவர்கள் ’கொரோனா நேரத்தில் ஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுரை கூறினார்..
சைக்கிள் வாங்குவதற்காக சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.