நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

 

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை 11 மணி அளவில் அவரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ரத்த அழுத்தம் தற்போதும் அதிகமாகத்தான் உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் நேற்றைய நிலைமையை ஒப்பிடும்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த மருத்துவக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்றும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த நிலையில் இன்று மாலை அதற்கான முடிவுகள் கிடைக்கும் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஹைத்ராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் குறித்து விசாரித்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவாகள் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.