தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளியான பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Wednesday,June 09 2021]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது ஊரடங்கு நிலவரம் குறித்து அவரிடம் விவாதிக்க இருப்பதாகவும் இதனால் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தாலும் கடைகள் அனைத்தும் காலை 12 மணி திறக்கப்பட்டு இருந்தன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமலே இருந்தது. எனவே கடந்த 25 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரும் 14 ஆம் தேதி வரை அத்யாவசிய கடைகள் மட்டும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் முதல்முறையாக 20 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இதனால் வரும் வாரங்களில் ஊரடங்கு விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் இதனால் ஆகஸ்ட் மாதத்தின்போது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இருக்கும் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துபேசிய தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு நல்ல பலனைக் கொடுத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரமாகப் பதிவாகி உள்ளது. இனிமேல் இந்த எண்ணிக்கையும் குறையும் எனக் கூறியிருந்தார்.
மேலும் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் தற்போது 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாவும் மருத்துவமனைகளில் 42 ஆயிரம் படுக்கைகள் காலியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ள மாவட்டங்களில் உடனடியான தளர்வுகள் அடுத்து சில விதிமுறைகளுடன் கூடிய தளர்வுகள் அமலுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.