"ஒன்றிய அரசு" என அழைக்க காரணம் என்ன....? முதல்வர் முக.ஸ்டாலின் பதில்....!

ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை என, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 50 வருடங்களுக்கு முன்பாகவே, அதாவது 1963-இல் நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா இந்த வார்த்தை குறித்து பேசியுள்ளார். ஒன்றியம் என்ற வார்த்தையில், கூட்டாட்சித் தத்துவம் உள்ளதால், அதை பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என முதல்வர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள், இதுகுறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலாக முதல்வர் முக. ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தவறாகவோ, குற்றமாகவோ கருத வேண்டாம். சட்டத்தில் இல்லாதது குறித்து நாங்கள் பேசவில்லை, அரசியல் சாசனத்தில் கூறியிருப்பதைத் தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அண்ணா, கலைஞர் கூறாததை நாங்கள் சொல்வதாக விமர்சனம் செய்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்தை, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை பிரதிபலிப்பதால் இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று பதிலளித்தார்.

இதற்கு நயினார் நாகேந்திரன், இந்தியாவில் இருந்து தான் மாநிலங்கள் பிரிந்தது என்று கூறினார். இதன்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதாவது, மாநிலங்கள் இந்தியாவில் இருந்து பிரியவில்லை, அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்தது தான் இந்தியா என விளக்கம் கூறினார்.