இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!
- IndiaGlitz, [Tuesday,September 22 2020]
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் ரேஷன் கடைகளுக்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இது இந்திய அளவில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதற்கட்டமாக 3,501 நடமாடும் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் நேரத்தில் இது தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நடமாடும் கடைகளால் மக்கள் சமூக இடைவெளியை எளிமையாகக் கடைபிடிக்க முடியும் என்பதோடு வீட்டு வாசலிலியே மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். இதனால் மக்களின் நேரமும் மிச்சமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்கள் ஒன்றுகூடும் வார்டு அல்லது தெரு முனைக்கே ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்படும். மக்கள் தங்களது வீடுகளின் அருகிலேயே பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் நாள், வழங்கப்படும் பொருட்கள் போன்றவற்றிற்கான விவரங்கள் முன்னதாக தெரிவிக்கப்பட்டு விடும். இந்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நியாய விலைப் பொருட்களை விநியோகிக்கும் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் இடங்கள் அரசாங்கத்தின் ஊராட்சி கட்டிடம், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடம் அல்லது மக்கள் ஒன்றுகூடுவதற்கு ஏற்ப பொது இடமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவர்.
இதற்குமுன் திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 43 மொபைல் ரேஷன் கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. மார்ச் 2020 இல் மாநிலச் சட்டசபையில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்ட வரைவை தாக்கல் செய்திருந்தார். மேலும் இத்திட்டத்திற்காக ரூ.9.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் பொதுமக்கள் நெரிசலில் அவதிப்படுவது குறைவாகும். மேலும் மலைக்கிராம மக்கள் எளிதாகப் பொருட்களை வீட்டிற்கு அருகிலேயே பெற்றுக் கொள்ள முடியும். நேரத்தைச் செலவிட்டு தொலைதூரத்துக்கு செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. இத்திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை திட்டமாக இருக்கும் என்பதையும் தமிழக அரசு சுட்டிக் காட்டியிருக்கிறது.