நவீன 1100 செல்போன் குறைதீர் திட்டம்… 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக முதல்வர் தகவல்!

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 1100 இலவச செல்போன் குறைதீர் திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இத்திட்டத்தினால் தமிழக மக்கள் இனி இருந்த இடத்தில் இருந்த படியே தங்களுடைய குறைகளை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தெரிவிக்க முடியும். அதுவும் 1100 என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இலவசமாக தெரிவிக்க முடியும். இதனால் தமிழக மக்களின் குறைகளும் மிக விரைவாகத் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது வரை இச்சிறப்பு திட்டத்தின் மூலம் இதுவரை 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் அளித்து உள்ளார். மேலும் இந்திய அளவில் முதன் முதலாக நவீன முறையில் இத்திட்டம் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் முலமைச்சரின் குறை தீர்ப்பு திட்டம் தற்போது அவசரக் கதியில் செயல்படுத்தப்பட வில்லை.

கடந்த செப்டம்பர் மாதமே தமிழகச் சட்டச்சபையில் இதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 110 விதியின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்ட இத்திட்டத்தை தமிழக முதல்வர் தற்போது துரிதமான வேகத்தில் செயல்படுத்தவும் செய்து இருக்கிறார். இதன் பலனாக இதுவரை 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் அவர் பிரச்சாரக் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.