போயஸ் கார்டனை அடுத்து திடீரென பரபரப்பான கொடநாடு எஸ்டேட்?
- IndiaGlitz, [Friday,August 18 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான 'வேதா இல்லம்' நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வு எடுக்கும் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கும் இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பங்களாவில் பணிபுரிந்த காவலாளி கொலை செய்யப்பட்ட பின்னர் ஒவ்வொரு வாயிலுக்கும் இரண்டு பேர் என 12 நுழைவாயில்களில் மொத்தம் 24 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பெரும் ஊகங்களை எழுப்பியுள்ளது.
போயஸ் கார்டன் போலவே கொடநாடு எஸ்டேட் பங்களாவும் நினைவிடமாக மாறப்போகின்றதா? என்று அந்த பகுதி மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் கொடநாடு பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் உள்பட யார் அந்தப் பக்கம் வந்தாலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.