கள்ளக்குறிச்சியில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்!!!
- IndiaGlitz, [Tuesday,August 11 2020]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களுக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொண்ட முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு திட்டங்களின் பயனாகக் கள்ளக்குறிச்சியில் கொரோனா எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். மேலும் தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகராக அங்குள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டப்பணிகள் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1.75 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் மருத்துவ மையம் அமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அம்மாவட்டத்தின் சுய உதவிக்குழு உறுப்பினர்களோடு கலந்து பேசியதாகவும் ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண் முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டப்பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்காக eNAM என்ற பெயரில் ரூ.11 கோடி மதிப்பிலான புதிய உணவு தானிய உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை ஆரம்பித்து இருப்பதகாவும் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் கூறிய முதல்வர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை ஒட்டி புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார். மேலும் அப்பகுதியில் 42,698 வீடுகளுக்கு நல்ல முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு நீரைச் சேமிப்பதற்கு வசதியாக அப்பகுதியில் பல நீர்த்தடைகள் உருவாக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்து இருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கொரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக முதல்வர் மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் போன்ற மாவட்டங்களுக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாகத் தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி முதன் முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.385 கோடியே 63 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாட்டப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு 60% நிதியுதவி (ரூ.195) அளிக்கும் எனவும் தமிழக அரசு சார்பில் ரூ.190 கோடியே 63 லட்சம் கோடியும் செலவழிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தவிர புதுக்கோட்டையில் கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் 150 மாணவர்களுடன் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. மேலும் 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூர் மாவட்டத்தில் 150 மாணவர்களுடன் புதிய மருத்துவக் கல்லூரியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் ஐசிடி மருத்துவமனை 2019-20 ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், அரியலூர் போன்ற மருத்துவக் கல்லூரி இல்லாத 11 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.