சென்னை உள்பட 3 மாவட்டங்கள் முடக்கப்படுகிறதா? முதல்வர் அவசர ஆலோசனை!
- IndiaGlitz, [Monday,March 23 2020]
(படங்கள் உதவி ANI)
கொரோனா வைரஸை தடுக்க நேற்று நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய சுகாதாரத்துறை நேற்று உத்தரவிட்டது என்பதை நேற்றே பார்த்தோம். இதில் தமிழகத்தை சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ள நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்குவது குறித்து 3 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். ஆலோசனைக்கு பின் முதல்வரிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளது.
இன்று காலை 5 மணியுடன் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு முடிந்துவிட்டதை அடுத்து சென்னையில் வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறந்துள்ளன என்பதும் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க இன்னும் சில நிமிடங்களில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது