சானிடைசர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு!
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அல்லது சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் அரசும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சானிடைசர் பயன்படுத்தும் போது முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும் என்று டுவிட்டர் தளத்தில் முகமது ரபீக் என்பவர் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் சானிடைசரை ஒரு தட்டில் கொட்டி அதில் நெருப்பு பற்றவைத்தார். அதில் உள்ள நெருப்பு கண்ணுக்கே தெரியவில்லை. ஆனால் அதில் நெருப்பு எரிகிறது என்பதை நிரூபிக்க ஒரு பேப்பரை அதன் அருகே கொண்டு செல்ல உடனே அந்த பேப்பர் தீப்பற்றி எரிந்தது. அதை அவர் காண்பித்து சானிடைசர் மீது நெருப்பு பட்டால் நெருப்பு கண்ணுக்கு தெரியாது என்றும் எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கைகளில் சானிடைசர் தடவிவிட்டு உடனடியாக அடுப்பில் வேலை செய்தால் இது போன்ற ஆபத்து ஏற்படும் என்றும் அவர் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ மிகப்பெரிய வைரலாகி பலருக்கு விழிப்புணர்வை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொது மக்களுக்கு சரியான நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய முகமது ரபிக் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்! மக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் என்றால் கடவுள் போல் பார்க்க முடியாத தூரத்தில் இருந்த நிலைமை மாறி தற்போது சாதாரண குடிமக்கள் ஒவ்வொருவரும் பதிவு செய்யும் டுவிட்டையும் முதலமைச்சர் படித்து அதற்கு பதிலளித்து நன்றியும் தெரிவித்து வருவது பாராட்டத்தக்க வகையில் உள்ளது என சமூக வலைத்தள பயனாளிகள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்!
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 23, 2020
மக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும். https://t.co/LdBBkzR6wW