பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் உருப்படாது: முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில் ஆளும் மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி, நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல் என்றும், அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் குடும்பம் உருப்படாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று அரியலூரில் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘கமல்ஹாசன் நாட்டுக்கு என்ன நல்லது செய்துள்ளார்? 70 வயதில் பிக்பாஸ் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், கமல் நாட்டுக்கு நல்லது செய்ய வரவில்லை என்றும் நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுக்க தான் வருகிறார் என்றும் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து கெட்டு தான் போவார்கள் என்றும் அந்த நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது என்றும் கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆர் படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களிலும் நல்ல கருத்துக்கள் இருந்தன என்றும், ஆனால் கமலஹாசன் படத்தில் ஏதாவது நல்ல கருத்துள்ள பாடல் இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, மக்களுக்காக நாங்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் நல்ல நல்ல கேள்விகளை கேளுங்கள், அதைவிட்டுவிட்டு கமல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். கமல்ஹாசன் குறித்து முதல்வரே நேரடியாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது