திரையரங்குகள் திறப்பது எப்போது? நாளை அறிவிப்பு என அமைச்சர் பேட்டி!
- IndiaGlitz, [Saturday,October 31 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளும் திறப்பதற்கு மட்டும் அரசு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் முதல்வரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து மருத்துவர் குழுவினர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், ‘திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் நாளை நல்ல முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார். திரையரங்கங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது கடினமான காரியம் என்றும் இருப்பினும் திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்
நாளை நவம்பர் 1 முதல் அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் அது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அதில் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
திரையரங்குகள் திறக்கப்பட்டால் முடங்கிக் கிடக்கும் ஏராளமான திரைப்படங்கள் வெளி வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது