புயலில் விழுந்த மரங்கள்: சாமானியன் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்

வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று கூறப்படும் நிலையில் புயல் கரையை நெருங்க நெருங்க சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

இதனால் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலை நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி அருகே இன்று மாலை மரம் ஒன்று விழுந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. அதேபோல் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஒரு மரம் விழுந்ததை அறிந்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் புயலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சென்னை பகுதியில் 3 இயந்திரங்களும், வடசென்னையில் இரண்டு இயந்திரங்களும், தென்சென்னையில் ஒரு இயந்திரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்

இந்த பதிவுக்கு கமெண்ட் அளித்த ஒரு டுவிட்டர் பயனாளி, ‘புயல் முடிந்தபிறகு தயவு செய்து அந்த மரங்களை மீண்டும் நடவும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’கண்டிப்பாக தம்பி’ என்று பதிலளித்துள்ளார். சாமானியனுக்கும் உடனுக்குடன் பதிலளிக்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது,