நாளை முதல் 30ஆம் தேதி வரை மேலும் ஒரு கட்டுப்பாடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தாலும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும், மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேலும் ஒரு கட்டுப்பாட்டை அறிவித்துள்ளார். இதன்படி நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்றும், ஒரு மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இபாஸ் அவசியம் என்றும் அறிவித்துள்ளார். மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கொரோனா பரவுவதால் இந்த நடவடிக்கை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் தேவையான அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான முயற்சிகள் எடுத்து வருவதாகவும், தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஒரே மண்டலத்துக்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.