கமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்
- IndiaGlitz, [Tuesday,November 12 2019]
தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் ஈடுபடவுள்ளனர். கமல்ஹாசன் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டார். ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கி களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கமல், ரஜினி ஆகிய இருவரும் அரசியலில் ஈடுபடவுள்ளதை அடுத்து இருவரையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இதுவரை அதிமுக அமைச்சர்கள் மட்டுமே கமல், ரஜினி ஆகியோர்களை விமர்சனம் செய்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இருவரையும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசியல் வெற்றிடம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, ‘தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. ரஜினி சொல்வது போல் அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன என்றார்.
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் குறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில், ‘அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று தெரிவித்தார்.