கொரோனாவால் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பாலமுரளி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தி அறிந்ததும், சென்னை காவல் ஆணையர் கேகே விசுவநாதன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சத்திற்கு மருந்து வாங்கி கொடுத்தும் சிகிச்சை பலனின்றி பால முரளி மரணம் அடைந்திருப்பது காவல்துறையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி அவர்களின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பலனின்றி பலியாகி இன்ஸ்பெக்டர் பாலமுரளி பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலமுரளி குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பாலமுரளி அவர்களுக்கு மனைவியும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பதும் பாலமுரளியின் தந்தையும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.