காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,September 26 2020]
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அவரது அறிவிப்பின்படி இன்று எஸ்பிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது
மேலும் நேற்று எஸ்பிபி உடலுக்கு அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எஸ்பிபியின் பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தாமரைப்பாக்கம் பண்ணை வீடு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் அங்கு 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்பிபிக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது