அடுத்த தலைமுறைக்கு செல்லும் நெல் ஜெயராமனின் புகழ்!
- IndiaGlitz, [Thursday,May 30 2019]
இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ததில் பெரும்பங்கு நெல் ஜெயராமன் அவர்களுக்கு உண்டு. வெறும் பேச்சோடு மட்டுமின்றி இயற்கை விவசாயம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர் நெல் ஜெயராமன். பாரம்பரிய நெல் திருவிழாக்கள் நடத்தி பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும், இளம் தலைமுறையினர்களுக்கும் இயற்கை விவசாயத்தையும் அதன் நன்மைகளையும் எளிய முறையில் புரிய வைத்தவர் நெல் ஜெயராமன் .
இந்த நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்ட ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். அவரது மறைவு விவசாயத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு இன்றளவும் உயிருடன் உள்ளது. அதனை மெய்ப்பிப்பது போல் தனிச் சிறப்புமிக்க நெல் ஜெயராமன் வரலாற்றை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற வைத்துள்ளது. இந்த பாடத்தில் இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர்களுடன் 'நெல்' ஜெயராமன் பற்றிய குறிப்புகளும் உள்ளது அவருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
நெல் ஜெயராமன் குறித்த பாடப்பகுதியை சேர்ந்ததற்காக 'நெல்' ஜெயராமனின் மனைவி சித்ரா ஜெயராமன் மற்றும் அவரது மகன் ராஜீவ் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.