மார்ச் 31வரை திரையரங்குகளை மூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
சீனா, இத்தாலி உள்பட உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் 100 இந்தியர்களுக்கு பரவிவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழக எல்லையோர மாவட்ட திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை 15 நாட்கள் தவிர்க்கவும் என்றும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை என்றும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.