ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,July 08 2020]
தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில் பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மீதும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பல மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டதாக செய்திகள் வெளிவந்தது என்பதை பார்த்தோம். இருப்பினும் சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட் ஆப் போலீஸ் அமைப்பை கலைப்பதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதனால் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது.
மேலும் சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது