18 தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் கடிதம்

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை தொடர்வதற்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியாக மனுகொடுத்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியும் ஜக்கையன் எம்.எல்.ஏ தவிர மீதி 18 பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை

இதனையடுத்து இன்று காலை 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். மேலும் சட்டசபை விடுதியை அவர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் காலி செய்தவுடன் அந்த 18 அறைகளுக்கும் சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக  தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்து 18 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் 18 பேர்களும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை செய்துள்ளார். 

இந்த நிலையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடி முக்கிய ஆலோசனை செய்யவுள்ளனர். அடுத்தடுத்து தமிழக அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டிருப்பதால் ஊடகங்களின் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.