சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்
- IndiaGlitz, [Monday,January 23 2017]
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன் வடிவை சட்டமாக நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் அவசரச் சட்டத்தின் முன் வடிவு நகலை தாக்கல் செய்தார்.
பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் முன் வடிவு நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டுக்காக விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், விலங்குகள் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் அதிகாரபூர்வமாக நீக்கப்படுகின்றது.
தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்ட முன்வடிஐ திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த சட்ட முன் வடிவு குறித்து முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசினர்,. இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த சட்ட முன் வடிவு சட்டமாக நிறைவேறியது.