"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது" - முதல்வர் மம்தா பானர்ஜி.
- IndiaGlitz, [Tuesday,December 10 2019]
மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தெரிவித்திருந்தது.இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று பாஜக அரசு அறிவித்தது. அதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இன்று கராக்பூர் பகதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி,”தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். மேற்குவங்க மாநிலத்தில் நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை, மத்திய பாஜக அரசால், இங்கு எதையும் திணிக்கமுடியாது. நாட்டின் குடிமக்கனை நாட்டை விட்டு வெளியேற்றவும், அவர்களை அகதிகளாக ஆக்கவும் பாஜக அரசு நினைக்கிறது” என்று மம்தா பானர்ஜி சாடினார்.