மெர்சலுக்கு எதிரான தமிழிசையின் கருத்து ஜனநாயக விரோதம்: திமுக பிரமுகர் கருத்து
- IndiaGlitz, [Friday,October 20 2017]
விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் காட்சிகளை நீக்க கோரி தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதத்தின் உச்சகட்டம் என்று திமுக பிரமுகர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், 'மெர்சல்' படத்தில் நடித்த விஜய், அப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசை விமர்சிக்கும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது.
ஜிஎஸ்டிக்கு எதிராக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரே கருத்து கூறியபோது இவர்கள் என்ன செய்தார்கள். ஒரு திரைப்படத்தில் தன்னுடைய சொந்த கருத்தை தெரிவிக்க இருக்கும் உரிமையை தடுக்க இவர்கள் யார்? அரசியல் அமைப்பு சட்டத்திலேயே அரசின் கொள்கைகளை சுதந்திரமாக விமர்சிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. தனி நபரை விமர்சித்தால் அந்த தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால் 'மெர்சல்' படத்தின் அரசின் கொள்கைதான் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசின் கொள்கைகளை விமர்சிப்பது உலகம் முழுவதும் ஜனநாயகத்தை நம்பும் நாடுகளில் உள்ள உரிமையாக கருதப்படுகிறது. அந்த உரிமையை தமிழிசை எதிர்த்தால் என்றால் அவர் ஜனநாயகத்திற்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபடுகிறார் என்பதுதான் அர்த்தம்' என்று கூறியுள்ளார்.