கொரோனா பாதிக்கப்பட்ட செய்தியாளர் உயிரிழப்பு....!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
திருவாரூரில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த, செந்தில்குமார் கொரோனா தொற்றால் காலமானார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. திருவாரூரில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி அருகில் உள்ள ராசப்பன் குடி என்னும் ஊரைச் சார்ந்தவர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில்குமார், இவர் மனைவி அனுசுயா. இத்தம்பதிக்கு 3 வயதில் பெண் உள்ள நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் இவர். சென்ற வருடம் கொரோனா நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நேர்த்தியாக செய்தியாக்கி வந்துள்ளார் செந்தில்.
இந்தநிலையில் செய்தியாளரான செந்தில்குமாருக்கு கடந்த மாதம், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட மருத்துவர்கள் ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சையளித்துள்ளனர். ஆனால் இன்றளவில் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இச்சம்பவம் இதர செய்தியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகத்துறையில் பணிபுரிந்தவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்தால், தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கும் என அறிவித்திருந்தது. இவரின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் உடனடியாக நிவாரண தொகையை வழங்கவேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.