'பீஸ்ட்' டிரைலர்: திருப்பூர் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலர் குறித்த எச்சரிக்கையை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’பீஸ்ட்’ படத்தின் டிரைலரை ஒரு சில திரையரங்குகளில் இலவசமாக ரசிகர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் இலவசமாக திரையிடப்பட்டதை அடுத்து அந்த தியேட்டருக்குள் குவிந்த ரசிகர்கள் அங்கிருந்த சேர்களை உடைத்துள்ளனர். இலவசமாக திரையிடப்படுவதால் 500 பேர்கள் கொள்ளளவு கொண்ட ஒரு தியேட்டரில் 2000 பேருக்கு வருவதால் திரையரங்கிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் அதற்கு முழுப் பொறுப்பு திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்று கொள்ள வேண்டும் நிலை ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த கைகள் என்ற திரைப்படம் வெளியான போது கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்தால் இரண்டு ரசிகர்கள் உயிரிழந்தனர். அப்போது அந்த திரையரங்கின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இலவசமாக முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் டிரைலரை வெளியிடும் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் திரையரங்கம் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே திரையரங்கு உரிமையாளர்கள் தயவுசெய்து இதுபோன்ற ட்ரைலர் வெளியாகும் போது இலவசமாக திரையரங்குகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்வது நல்லது. அதேபோல் திரை அரங்குக்கு வெளியே எல்.இ.டி ஸ்க்ரீன் மூலமும் டிரைலர் வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.