நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: விரக்தியால் திருப்பூர் மாணவி தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்று இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி இந்த ஆண்டு +2 தேர்வில் 600க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். எனவே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் நிச்சயம் அவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும் நிலை இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரிதுஸ்ரீ, இன்று தேர்வு முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவான மதிப்பெண்கள் தான் வந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிதுஸ்ரீ, இனிமேல் தன்னால் மெடிக்கல் படிக்க முடியாதே என்று அழுது கொண்டே இருந்துள்ளார். அவருடைய பெற்றோர்கள் அவரை சமாதானப்படுத்தியும் விரக்தியில் இருந்த அவர் திடீரென தூக்கில் தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோர்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கறைய வைக்கும் வகையில் இருந்தது.
நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும் மருத்துவப்படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை, அந்த படிப்பு படிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கையே பறிபோய்விட்டதாக சில மாணவர்கள் கருதியிருக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ படிப்பைவிட சிறந்த பல படிப்புகள் தற்போது அறிமுகமாகியிருக்கும் நிலையில் மருத்துவம் கிடைக்காவிட்டால் மனவிரக்தியில் விலைமதிப்பில்லா உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை இனியும் எந்த மாணவரும் எடுக்கக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. பெற்றோர்களும் குழந்தைகளின் மனதில் டாக்டர் என்ற ஆசையை மட்டும் வளர்க்காமல் எந்த படிப்பு படித்தாலும் நல்ல எதிர்காலம் உண்டு என்ற அறிவுரையை கூறி வளர்க்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout