சம்பளம் போட பணமில்லை: பெருமாளுக்கே வந்த பெருஞ்சோதனை
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
உலகிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற தகவல் வெளியே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே அதிக வருமானம் உள்ள கோயில்களில் முன்னணி இடத்தில் இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பதும் உண்டியல் பணம் மட்டும் கோடிக்கணக்கில் வசூல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நன்கொடை மூலம் வரும் தொகையும் கோடிக்கணக்கில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலின் வருமான தொகையான ஆயிரக்கணக்கான கோடியை திருப்பதி தேவஸ்தானம் வங்கியில் டெபாசிட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக திருப்பதி கோவில் மூடப்பட்டது. இதனால் இந்த கோயிலுக்கு வரவேண்டிய உண்டியல் வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது. கோயிலின் வருமானம் சுமார் 400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தேவஸ்தானம் தரப்பிலிருந்தும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் இறுதியில் ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தற்போது வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் இந்த மாதம் சம்பளம் போட பணம் இல்லை என்றும் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் கூறியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்னதானம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஆண்டுதோறும் 2500 கோடி ரூபாய் செலவாகும் கூறப்படுகிறது இருப்பினும் இந்த செலவு போக ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தங்கம் மற்றும் ரொக்கமாக 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இந்த டெபாசிட் பணத்தை எடுக்காமல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.