கொரோனா வைரஸ் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று முதல் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்ததால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருப்பதி கோவிலில் நூற்றுக்கணக்கில் மட்டுமே பக்தர்கள் வருகை தருவதால் திருப்பதி கோவிலே கடந்த சில நாட்களாக வெறிச்சோடி இருந்தது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் திருப்பதி கோவில் மூடப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவிலுக்கு செல்வதற்கான அலிபுரி மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது