55 வருடம் கழித்து… கூகுள் மேப் உதவியுடன் தந்தையின் கல்லறையைக் கண்டுபிடித்த மகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
6 மாதக் குழந்தையாக இருந்தபோதே மலேசியாவில் இறந்துபோன தனது தந்தையின் கல்லறையை, 55 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்தபடியே கூகுள் மேப் உதவியுடன் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார். இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாறன் (56). இவருடைய அப்பா பூங்குன்றன் என்ற ராமசுந்தரம். அம்மா ராதாபாய். ராமசுந்தரம் மலேசியாவில் ஆசிரியராக வேலைப்பார்த்தவர் என்பதால் அம்மா ராதாபாயும் அவருடனே தங்கியிருந்தார். இந்நிலையில் ராதாபாய்க்கு குழந்தை பிறந்து வெறும் 6 மாதங்களே ஆன நிலையில் கடந்த 1967 இல் ராமசுந்தரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் கடும் துயரடைந்த ராதாபாய், தனது கணவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். பிறகு ஒருசில வருடங்களிலேயே இவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இதனால் பெற்றோரின் ஆதரவின்றி வளர்ந்த திருமாறன் ஒரு கட்டத்தில் தன்னைப்போல யாரும் ஆதரவின்றி வளரக்கூடாது என நினைத்து சொந்தமாக ஒரு அனாதை ஆசிரமத்தை நெல்லையில் ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். மேலும் தான் வளர்க்கும் பிள்ளைகளுக்குத் தானே திருமணம் செய்வித்து அவர்களைப் பாதுகாப்பதே தனது கடமை என்றும் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் திருமாறனுக்குத் தன்னுடைய அப்பா ராமசுந்தரத்தின் நினைவு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மலேசியாவில் அவர் வசித்த இடத்தை கூகுள் மேப் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார். ஆனால் தனது அப்பா எங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று அறியாத திருமாறன், தனது அப்பாவிடம் படித்த மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து இருக்கிறார்.
அந்த வகையில் மோகனராவ், நாகப்பன் எனும் இருவரின் விவரங்களைச் சேகரித்த திருமாறன் அவர்களின் உதவியுடன் தனது அப்பாவின் கல்லறை மலேசியாவில் உள்ள கெர்லிங் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற திருமாறன் தனது தந்தையின் கல்லறை ஒரு புதருக்கு இருப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் அந்த இடத்தைச் சுத்தம் செய்த அவர், கல்லறைக்கு அருகில் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்திவிட்டு அப்பாவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
கைக்குழந்தையாக இருந்தபோது இறந்துபோன தனது தந்தையின் கல்லறையை இந்தியாவில் இருந்தவாறே கூகுள் மேப் உதவியுடன் கண்டறிந்து பின்னர் நேரிலேயே சென்று மரியாதை செய்துவிட்டு திரும்பிய பாசமிகு திருமாறனின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout