திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை: கொரோனாவால் விபரீத முடிவு
- IndiaGlitz, [Thursday,June 25 2020]
தமிழகத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தினசரி பார்த்து வருகிறோம்
மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மட்டுமன்றி கொரோனா வந்துவிட்டது என்ற பயத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது
அந்த வகையில் தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அதிபர் தனக்கு கொரோனா வந்துள்ளதால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றது திருநெல்வேலி அல்வா கடை. இந்த கடையின் அதிபர் ஹரிசிங் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியானது. இதனை அடுத்து அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், திடீரென இன்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது