மகன், மருமகளுடன் திடீரென ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசு: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Tuesday,March 10 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் இறங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் தற்போது பிரபலமாக உள்ள கட்சிகளிலிருந்து பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருசில பிரமுகர்கள் அவருடைய கட்சியில் இணைய ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் தினத்தன்று அவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென தனது மகன் மற்றும் மருமகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பலர் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் திடீரென முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஜினியைச் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஜினி உடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசு விளக்கம் அளித்தபோது ’என்னுடைய பேரன் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் பெறவே நடிகர் ரஜினிகாந்தை மகன் மற்றும் மருமகளோடு சந்தித்தேன்’ என்றும் ‘நீங்கள் நினைப்பது மாதிரி வேறு ஒன்று இல்லை’ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் அவருக்கு எந்தவித அரசியல் ஆலோசனையும் கூறவில்லை என்றும், அவர் யாரிடமும் ஆலோசனை பெறும் நிலையில் இல்லை என்றும், அவருக்கே இங்குள்ள அரசியல் நிலவரம் அனைத்தும் தெரியும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
ரஜினிகாந்த் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது