புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த அசத்தல் காரியம்!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டி முடிந்த கையோடு நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டிம் சவுதி தனது ஜெர்சியை ஆன்லைனில் ஏலம் விட்டு இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து டிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவருக்காக இந்த ஜெர்சியை தாம் ஏலம் விடுவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். டிரேட்மி எனும் இணையத்தளத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டு உள்ள இந்த ஜெர்சியில் நியூசிலாந்து வீரர்கள் அனைவரின் கையொப்பமும் இருக்கும் என்றும் வரும் ஜுலை 5 ஆம் தேதி மதியம் 1.45 மணிவரை இந்த ஏலம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு உள்ள டிம், அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 8 வயது சிறுமி Hollie Beattie க்கு உதவும் வகையில் ஜெர்சியை ஏலம் விட்டு உள்ளேன். இதன் மூலம் கிடைக்கும் நிதி அந்த குழந்தையின் மருத்துவத்திற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் டிம் ஏலத்திற்கு வைத்து இருக்கும் அவரது ஜெர்சி இதுவரை 43200 யுஎஸ் டாலருக்கு விலை கேட்கப்பட்டு உள்ளது.