டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் திடீர் பதவி விலகல்…. பாலியல் புகார் காரணமா?

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் தன்னுடைய பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் நடைபெற இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் கேப்டன் டிம் பெய்ன் செய்த இந்தக் காரியம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெயின் பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து 3 வாரங்களில் டிம் பெய்ன் “தனக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பினார்“ என பெண் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டிம் பெய்ன் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து விளையாடலாம் எனக் கூறியது. கடந்த சில ஆண்டுகளாக மறந்தே போயிருந்த இந்த விவகாரம் தற்போது ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அடுத்து மீண்டும் பூதாகரமாகியிருக்கிறது.

இதனால் மனம் வருந்திய டிம் பெய்ன் கடந்த வெள்ளிக்கிழைமை ஹோபார்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது ராஜினாமை திடீரென அறிவித்தார். மேலும் “இது நம்ப முடியாத முடிவு. ஆனால் எனக்கும், எனது குடும்பத்ற்கும் கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு. நடந்த சம்பவம் குறித்து அப்போது நான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன். எனது குடும்பம் என்னை மன்னித்துவிட்டனர், இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஏதேனம் சேதம் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கி ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.