அரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்
- IndiaGlitz, [Sunday,November 10 2019]
அரசுப் பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக டிக்டாக்வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. வித்தியாசமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்து லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ஒருசிலர் ஆபத்தான வீடியோக்களை எடுத்து உயிரை மாய்த்து கொள்வதும், மற்றவர்களுக்கு தொல்லை தரும் வகையில் வீடியோ எடுத்து காவல்துறையினர்களிடம் சிக்கி கொள்வதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கடலூரில் அரசு பேருந்து ஒன்றை தனது இருசக்கர வாகனத்தால் மறித்து, அந்த இருசக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே ’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடலை பாடியவாறு வாலிபர் ஒருவர் டிக்டாக்வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ வழக்கம் போல் வைரலாகிய நிலையில் இந்த வாலிபரை போல் மற்றவர்களும் செய்து அரசு பேருந்துகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவை எடுத்த இளைஞர் பெயர் அஜித் என்றும், அவர் இதே போன்று ஒரு சில ஆபத்தான வீடியோக்களை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
பிறருக்கு தொல்லை தரும் வகையில் டிக்டாக் வீடியோ எடுத்தால் இந்த இளைஞரைப் போல சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த சம்பவத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் பாடமாகும்.