பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

டெல்லியில் டிக்டாக் பிரபலமும் ஜிம் பயிற்சியாளருமான 27 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிக்டாக் தளத்தில் ஜிம் பயிற்சிகள் குறித்த வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் மோஹித் மோர். இவரது டிக்டாக் பக்கத்தை ஐந்து லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அதேபோல் இவர் இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் மோஹித் மோர் தனது வீட்டின் அருகில் உள்ள நண்பரின் கடைக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட அந்த கடைக்குள் நுழைந்து மோஹித் மோரை சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த மோஹித்தை அவரது நண்பர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.