டிக் டிக் டிக்: திறமையான முதல் முயற்சி
இந்திய திரையுலகம் குறிப்பாக தமிழ் திரையுலகம் ஹாலிவுட்டுக்கு இணையாக தற்போது தரமான திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. நமது இளையதலைமுறை இயக்குனர்களின் சிந்தனையும் பார்வையும் ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது என்பது பல திரைப்படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதல் ஜாம்பி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி செளந்திரராஜன், இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' என்ற படத்தை இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
ஒரு மிகப்பெரிய விண்கல் தென்னிந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. அந்த விண்கல் பூமியில் விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும். சுமார் எட்டு கோடி மக்கள் அழிந்துவிடுவார்கள். அந்த பயங்கர சேதத்தை தடுக்க வேண்டுமானால் அந்த விண்கல்லை ஒரு குறிப்பிட்ட எல்லையை தொடுவதற்கு முன் இரண்டாக பிளக்க வேண்டும். அதுவும் ஏழே நாளில். ஆனால் அதை பிளக்கக்கூடிய சக்தியான அணுசக்தியை விண்வெளியில் ஒரு இடத்தில் நமது அண்டை நாடு ஒன்று மறைத்து வைத்துள்ளது. அந்த அணுசக்தியை திருடி, விண்கல் எல்லையை கடக்கும் முன் பிளக்க வேண்டும் என்ற டாஸ்க்குடன் ஜெயம் ரவி டீம் விண்வெளிக்கு செல்க்றது. ஆனால் அதற்கு ஏற்படும் தடைகள், பிரச்சனைகள், சில துரோகங்கள், சில திருப்பங்கள் ஆகியவற்றை கடந்து ஜெயம் ரவி டீம் சாதித்ததா? என்பதுதான் மீதிக்கதை
திருடன், மேஜிக்மேன், ஹேக்கர், பாசமான தந்தை, விண்வெளி வீரர் என பல அவதாரங்களில் நடிக்க ஜெயம் ரவிக்கு இந்த படம் ஒரு வாய்ப்பு. அனைத்து வாய்ப்புகளிலும் சிக்சர் அடித்துள்ளார். குறிப்பாக தனது மகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லும் இடத்திலும் அதே நேரத்தில் மகனையும் காப்பாற்ற வேண்டும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் நடிப்பும் சூப்பர்
நாயகி நிவேதா பேத்ராஜ், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். படம் முழுவதும் அவருக்கு சீரியஸ் காட்சிகள் தான். காதல், காமெடி ஆகியவற்றுக்கு வேலையே இல்லையென்றாலும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.
ரமேஷ் அரவிந்த் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஜெயம் ரவியின் நண்பர்களாகவும் ஹேக்கர்களாகவும் வருகின்றனர். அதே சமயம் படம் முழுக்க முழுக்க சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கொஞ்சம் பார்வையாளர்களை ரிலாக்ஸ் செய்வது இவர்கள் இருவர்தான்
ஜெயப்பிரகாஷ், வின்செண்ட் அசோகன், ஆகியோர்கள் நடிப்பு ஓகே. ஜெயம் ரவியின் மகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற அளவில் இந்த சின்ன வயதிலேயே தந்தைக்கு சவால் விடும் நடிப்பை தந்துள்ளார்.
இசையமைப்பாளர் இமானுக்கு இது 100வது படம். அதற்கேற்ப பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி கம்போஸ் செய்துள்ளார். ஒரு விண்வெளிப்படத்த்துக்கு சரியான பின்னணி இசையும் இருப்பதால் படத்தின் விறுவிறுப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை குறையவே இல்லை
இந்த படத்தின் முதல் ஹீரோ என்று கலை இயக்குனரைத்தான் கூற வேண்டும். ஒரு விண்வெளி படத்துக்கு நம்பும்படியான் செட் அமையாவிட்டால் அது காமெடியாகிவிடும் என்பதை உணர்ந்து ஹாலிவுட் தரத்திற்கு செட் அமைத்து, செட் என்றே தெரியாத அளவிற்கு மிக இயல்பாக பணிபுரிந்துள்ளனர். ஆர்ட் டீமுக்கு பாராட்டுக்கள் அதேபோல் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டரின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
ஒரு விண்வெளி திரைப்படம் எடுக்க வேண்டும், அதுவும் முதல் இந்திய விண்வெளி திரைப்படம் என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உணர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சக்தி செளந்திரராஜன். விண்வெளி மையத்தில் அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஏவுகணையை மிக எளிதாக ஜெயம் ரவி எடுத்து வருவது, திடீரென ஏவுகணை காணாமல் போய்விட்டது என்று கூறுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான காட்சிகள் உண்டு. அதேபோல் இந்தியாவின் ஒரு பகுதி ஏழே நாளில் அழியப்போகிறது. ஆனால் அதுபற்றிய சீரியஸ் இல்லாமல் பதட்டமே இல்லாமல் ஹீரோ உள்பட ராணுவ அதிகாரிகளும் சாதாரணமாக இருப்பது நெருடலாக உள்ளது. இருப்பினும் இந்த படம் ஒரு முதல் சோதனை முயற்சி என்பதால் இந்த படத்தில் உள்ள ஒருசில குறைகளை மறந்து இந்த படத்தை பாராட்டலாம். ஆர்மோகடான், அப்பல்லோ 13, கிராவிட்டி போன்ற ஆங்கில விண்வெளி படங்களை பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த படம் ஏமாற்றத்தை கொடுக்கலாம், ஆனால் முதல்முறையாக ஒரு விண்வெளி படத்தை திரையில் பார்ப்பவர்கள் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். குறிப்பாக குழந்தைகளை இந்த படம் கவரும்
மொத்தத்தில் லாஜிக்கை பார்க்காமல் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
Comments