பங்களாவில் வசித்து, பன்னீரில் குளித்த குடும்பம்...! முதல்வரிடம் உதவி கேட்டு மனு....!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

தமிழ் திரையுலகில் முதன்முதலாக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் தான் தியாகராஜ பாகவதர். கடந்த 1944 - ஆம் ஆண்டு தீபாவளி அன்று, ரிலீசான படம்தான் காளிதாஸ், இந்த திரைப்படம் 1945,1946 உள்ளிட்ட மூன்று வருடங்கள் ஹவுஸ் புல்-ஆக ஓடக் காரணம் எம்.கே.டி பாகதவர் தான். இவர் நடித்த படங்களில், இவரே பாடிய அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, அசோக் குமார் உள்ளிட்ட திரைப்படங்கள், மாதக்கணக்கில் ஓடி பாகவதருக்கு வெற்றி வாகையை சூடித்தந்தன. அந்தக்காலத்தில் நன்கு சம்பாரித்ததால், பங்காளவில் வசித்தும், பன்னீரில் குளித்தும், தங்கத்தட்டில் உணவு உண்டும், மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள் தான் இவரது குடும்பத்தினர். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.

அக்காலத்தில் இவரை பற்றிய கிசுகிசு எழுதிய லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரின் கொலை வழக்கில் இவர் சிக்கினார். இந்த பிரச்சனையால் சினிமாவில் உள்ள புகழை இழந்தார், மேலும் பாகவதருடைய வீண் ஆடம்பரத்தால் அவர் குடும்பமே வறுமையை சந்திக்க நேரிட்டது. பிணியால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை அரசு மருத்துவமனையில், தனது 49 வயதில் உயிரிழந்தார்.

பாகவதரின் முதல் மனைவி குடும்பத்தார் நல்ல வசதியுடன் தான் வசித்து வருகிறார்கள். ஆனால் அவருடைய துணைவியார் ராஜம்மாளின் குடும்பம் வருமானம் இல்லாமல், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இவரது மகளான அமிர்தலட்சுமி என்பவர் கணவரை இழந்தவர். இவரது மகன் சாய்ராம் தான் உதவிகேட்டு சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து, முதல்வரின் தனிப்பிரிவில் தங்களுக்கு வீடு ஒதுக்கி தரும் படி உதவி கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.

சாய்ராம் கூறியிருப்பதாவது, பாட்டியின் இறப்பிற்கு பிறகு எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களுடைய குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு சிவக்குமார், சூர்யா குடும்பத்தினர் உதவி செய்து வருகிறார்கள். அரசு எங்களுக்கு வீடு ஒதுக்கி தந்தால், குடும்பத்துடன் வசிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.