'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்ற சினிமா துப்பறிவாளர் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

சித்திரம் பேசுதடி:

மிஷ்கின் இயக்கிய முதல் படமான 'சித்திரம் பேசுதடி' படம் வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து அனைத்து விதத்திலும் மாறுபட்டு இருந்ததே அவர் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படத்தின் திரைக்கதை, கதை சொல்லும் பாணி, ஹீரோயின் தந்தை கேரக்டர் குறித்த சஸ்பென்ஸ், கேமிரா ஆங்கிள், ஆகிய அனைத்துமே தமிழ் ரசிகர்களுக்கு புதிதானது என்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அஞ்சாதே:

முதல் படம் போலவே மிஷ்கின் இயக்கிய இரண்டாவது படம் 'அஞ்சாதே' படமும் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டது. ஒரு போலீஸ் அதிகாரி ஆவதற்கு அனைத்து தகுதியும் இருந்தும் போலீஸ் வேலை கிடைக்காத ஒரு கேரக்டருக்கும், திடீரென அதிர்ஷ்டத்தால் போலீஸ் வேலை கிடைத்த ஒரு கேரக்டருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. மேலும் குழந்தை கடத்தல், ஆக்சன் என விறுவிறுப்பான காட்சிகளும் உண்டு. காமெடி ஹீரோவாக நாம் பார்த்த பாண்டியராஜனையும், ஹேண்ட்சம் ஹீரோ பிரசன்னாவையும் கொடூர வில்லனாக்கிய தைரியம் மிஷ்கினுக்கு மட்டுமே உண்டு

நந்தலாலா:

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இன்னொரு படமான 'நந்தலாலா', ஒரு வெளிநாட்டு படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கியிருப்பார். அவரே இந்த படத்தில் ஹீரோவாக நடித்தது இன்னொரு சிறப்பு. மனநோயாளி மிஷ்கின், பாட்டியிடம் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறும் சிறுவன், பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் ஆகிய மூன்று கேரக்டர்களை வைத்து ஒரு முழு படத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு சென்ற பெருமை மிஷ்கினை சேரும்

யுத்தம் செய்:

மிஷ்கின் இயக்கிய மற்றுமொரு அதிரடி திரைப்படம் 'யுத்தம் செய்'. வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதைதான் இந்த படம். ஓர் அப்பாவி நடுத்தரக் குடும்பம் போலீஸ் நெட்வொர்க்கின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றுவது கொஞ்சம் நம்பமுடியாமல் இருந்தாலும் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முகமூடி:

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இந்த படம் மட்டுமே வர்த்தக ரீதியில் சரியாக போகாத படம். குழந்தைகள் படம் போன்று இருந்ததால் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக விதைத்துவிட்டு, பின்பாதியில் அந்த 'பில்ட்-அப்’பைத் தக்கவைக்கத் மிஷ்கின் தவறிவிட்டதே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:

மிஷ்கின் இயக்கிய விறுவிறுப்பான க்ரைம் படங்களில் இதுவும் ஒன்று. அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே இந்த படம். திடுக்கிட வைக்கும் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது

பிசாசு:

பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை மிஷ்கின் அறிமுகம் செய்து வைத்த படம் தான் இது. அதாவது இந்த படத்தில் வரும் பேய் நல்ல பேய். மனிதர்களுக்கு உதவி செய்யும் பேய், ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் பேய். அப்பாவுடன் மனம் உருகும் வகையில் பேசும் பேய் என தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராக காட்சிகள் இந்த படத்தில் அதிகம்

துப்பறிவாளன்:

ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில், ஒரு தொடர் குற்றச்செயலை மதிநுட்பத்துடன் துப்பறியும் கதையே ‘துப்பறிவாளன்’. நேர்த்தியான திரைப்படமாக்கல், தொழில்நுட்பத்தோடு சஸ்பென்ஸ் கலந்து இயக்கிய மிஷ்கின், துப்பறிவாளர் கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக விஷாலை தேர்வு செய்தது கூடுதல் சிறப்பு அம்சமாக இருந்தது. தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சியாக இருந்த இந்த படம் பெற்ற வெற்றியால் மேலும் இதுபோன்ற படங்கள் உருவாக வழிவகை செய்துள்ளது.

மிஷ்கின் படங்கள் என்றாலே அவரது தனித்தன்மை இருக்கும். மற்ற படங்கள் போல் நான்கு பாடல்கள், நான்கு சண்டைக்காட்சி, ஒரு காமெடி தொடர் என்று இல்லாமல் வித்தியாசமாக கதை சொல்வார் என்ற நம்பிக்கையை பெற்றதே மிஷ்கினின் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த வெற்றி மென்மேலும் தொடர இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம்