'துணிவு' திரைவிமர்சனம்: அஜித்-எச் வினோத்தின் துணிவே துணை!
அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
சென்னை உள்ள யுவர்ஸ் வங்கியில் ஒரு கும்பல் 500 கோடி ரூபாய் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது. அதற்கு சென்னை அசிஸ்டன்ட் கமிஷனரும் துணை போகிறார். அவர்கள் வங்கிக்குள்ள அதிரடியாக நுழைந்து வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பணயக்கைதியாக பிடித்துக் கொண்டு கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது அதே வங்கியில் ஏற்கனவே கொள்ளையடிக்க வந்த அஜித் அசிஸ்டன்ட் கமிஷனரின் கொள்ளையர்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். நீங்கள் கொள்ளையடிக்க வந்தது 500 கோடி, ஆனால் நான் கொள்ளையடிக்க போவது ஐயாயிரம் கோடி என்று அதிரடியாக அஜித் கூற பெரும் திருப்பம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தையும் மீறி மூன்றாவதாக இன்னொரு கூட்டம் அதே வங்கியில் கொள்ளையடிக்க வந்திருப்பதை அஜித் புரிந்து கொள்வதற்குள் அவர் அந்த மூன்றாவது கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்கிறார். இத்துடன் முதல் பாதி முடிவடைகிறது. இரண்டாவது பாதியில் மூன்றாவது கொள்ளையர்கள் யார்? அவர்களுடைய தலைவர் யார்? இந்த கொள்ளையில் ஈடுபடும் பண முதலைகள் மற்றும் அரசியல்வாதிகள் யார்? கொள்ளையடிக்கப்பட திட்டமிட்டுள்ள கோடிகள் எவ்வளவு? காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? அஜித் அந்த கொள்ளையர்களிடம் இருந்தும், போலீசிடம் இருந்தும் தப்பினாரா? என்பது போன்ற பல டுவிஸ்ட்களுக்கு இடையே மக்களுக்கு தேவையான ஒரு மெசேஜ் உடன் படம் முடிவடைகிறது.
'மங்காத்தா' திரைப்படத்திற்கு பின்னர் ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்துடன் அறிமுகமாகும் அஜித், முதல் காட்சியில் இருந்தே ஒட்டுமொத்த கதையையும் தன் வசப்படுத்தி கொண்டு ஒன் மேன் ஷோவாக புகுந்து விளையாடியுள்ளார். இதுவரை வெளியான படங்களில் முறைப்புடன் வசனம் பேசிய நிலையில் இதில் ஜாலியாக, காமெடியுடனும் நடனத்துடனும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு அறுசுவை விருந்தையே ரசிகர்களுக்கு படைத்துள்ளார். பணத்தை வெளியே கொண்டு செல்ல நீர்மூழ்கி கப்பல் கேட்பது, கான்ஸ்டபிளுடன் மட்டும் தான் டீல் பேசுவேன் என்று அடம்பிடிப்பது, வங்கி உரிமையாளரையே வங்கிக்கு வரவழைப்பது, தன்னை பிடிப்பேன் என்று சவால் விடும் சமுத்திரக்கனிக்கு பாடம் எடுப்பது என அஜித்தின் நடிப்பை சொல்லி கொண்டே போகலாம்.
ஒரு மாஸ் ஹீரோ படத்தில் ஹீரோயின் என்பது பொம்மையாக பாடலுக்கு மட்டும் வந்து போவார் என்ற நிலையில் மஞ்சுவாரியருக்கு ஒரு அழுத்தமான கேரக்டரை இயக்குனர் எச். வினோத் கொடுத்து உள்ளார். அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி புகுந்து விளையாடி உள்ளார்.
வங்கி உரிமையாளராக ஜான் கொகைன், சென்னை கமிஷனர் ஆக சமுத்திரகனி, பத்திரிகையாளராக மோகனசுந்தரம், கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள் என ஒவ்வொரு கேரக்டரும் தங்களுக்கு கிடைத்த கேப்பில் மாஸ் காட்டி உள்ளனர். குறிப்பாக மோகனசுந்தரம், பரபரப்பான செய்திக்காக நியூஸ் மீடியாக்கள் என்னென்ன திகிடுதனங்கள் செய்கின்றன என்பதை தோலுரித்து காட்டியுள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் கருத்து சொல்லும் சமுத்திரக்கனி இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிரிமினலை ஜோக்கராக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் என் வாயாலேயே அவன் என்னை ஹீரோ என்று சொல்ல வைத்துவிட்டான் என்று புலம்புவது உள்பட அவரது காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த பாராட்டுக்குரியவர் என்றால் அது இயக்குனர் எச் வினோத் தான் என்பதை உறுதியாக கூறலாம். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது? வாடிக்கையாளர்களின் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்? மியூச்சுவல் ஃபண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு என்று மக்களின் பணத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்? பங்குச்சந்தையில் நடக்கும் கோடிக்கணக்கான மோசடி என ஒரு பெரிய ஹோம்வொர்க் செய்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் மக்களுக்கு ஒரு பாடமே நடத்தியுள்ளார் எச்.வினோத்.
இந்த படம் பார்த்து வெளியே வருபவர்கள் இனிமேல் ஒரு ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றால் கூட ஆயிரம் முறை யோசிப்பார்கள் என்பது உறுதி. பலமணி நேரம் வகுப்புகள் எடுத்து மக்களுக்கு ஏற்படுத்த முடியாத விழிப்புணர்வை ஒரு இரண்டரை மணி நேர படத்தில் எச் வினோத் காட்டி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.
மேலும் மாஸ் நடிகர் என்பதற்காக அறிமுக பாடல், கேரக்டர்கள் அறிமுகம் என நேரத்தை வீணாக்காமல் முதல் காட்சியில் இருந்தே கதையை சொல்ல ஆரம்பித்து விடுவது தமிழ் சினிமாவுக்கு புதிது. படத்தில் ஒரு காட்சியை கூட தேவையில்லாத காட்சி என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் வேகமாக நகர்கிறது. ஒரு சில பிளாஷ்பேக் காட்சிகளை கூட சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறார். ஹீரோ மீது ஒரு குண்டு கூட படாது, அப்படியே பட்டாலும் அவர் தொடர்ந்து சண்டை போடுவார், இந்திய கடல் படையையே ஒரு சிங்கிள் ஆளாக நின்று ஹீரோ சமாளிப்பார் போன்ற லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சினிமாவில் இவை தவிர்க்க முடியாதது.
ஜிப்ரானின் சில்லா சில்லா பாடல் தவிர மற்ற பாடல்கள் படத்தின் கதையோட்டத்துடன் வருவதால் படத்தின் கதைக்கு பாதிப்பில்லை. பின்னணி இசையில் பட்டையை கிளப்பியுள்ளார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு உள்பட டெக்னீஷியன்கள் அனைவரும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மொத்தத்தில் அஜித்தின் 'துணிவு', துணிவே துணை!
Comments