மீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

கடந்த ஆண்டு தமிழகத்தில் சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அதே போல் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் என்ற பகுதியில் கோவர்த்தன என்பவரின் மகனான 3 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது புதிதாக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் விவசாயத்திற்காக ஒருவர் இரண்டு போர்வெல் போட்டுள்ளார். இரண்டிலும் தண்ணீர் வராததால் மூன்றாவது போட்ட போர்வெல்லில் தண்ணீர் வந்துள்ளது. இதனையடுத்து அவர் ஏற்கனவே போட்ட இரண்டு போர்வெல்லையும் மூடாமல் இருந்துள்ளார். இந்த மூடப்படாத ஒரு போர்வெல் குழியில் தான் 3 வயது சிறுவன் விழுந்துள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க போராடினர். முதல் கட்டமாக 17 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதை கண்ட மீட்பு குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அருகில் ஒரு பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளம் தோண்டிய போது ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சிறுவன் மேலும் ஆழத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து பக்கவாட்டில் குழிதோண்டி சிறுவனை மீட்புக்குழுவினர் மீட்டனர். ஆனால் சிறுவன் உயிரிழந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பயன்படுத்தாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்தியதால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.