பெற்றோர்களின் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக வைத்திருந்ததால் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவனின் மரணம், டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தூத்துகுடியில் மூன்று வயது குழந்தை குளியலறை தொட்டியில் விழுந்து மரணம் என நேற்று இரண்டு குழந்தைகள் பெற்றோர்களின் அலட்சியத்தால் பலியாகின.

இந்த நிலையில் இன்று காலை பன்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி மூன்று வயது சிறுமி பலியான நிலையில் அதேபோல் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று விருதுநகரில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி என்பவரின் 3 வயது மகன் உத்ரன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகே, சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து சிறுவனை மீட்டு உடனடியாக அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் அந்த சிறுவனை பரிசோதித்து அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் கதறி அழுதனர். பெற்றோர்களின் அலட்சியத்தாலும் சமூக பொறுப்பின்றி ஆழ்துளை, கழிவுநீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை மூடாமல் வைத்திருப்பதாலும் குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது