விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • IndiaGlitz, [Friday,July 24 2020]

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு உதவியதாக வனக் காவலர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடிகர்கள் விமல் சூரி ஆகியோர்கள் மீன் பிடித்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் இதில் மூன்று வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்ததால் அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது

மேலும் இபாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு நடிகர் விமல் மற்றும் சூரி சென்றது உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. உள்ளூர் பிரமுகர் ஒருவரின் வாகனத்தில் இருவரும் சுற்றுலா சென்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாக தெரியவந்துள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

இதுகுறித்து கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ’நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வந்தனர் என்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக அவர்கள் எப்படி பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறினார். விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது