செல்பி எடுக்கும்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூவர்: இருவர் உடல் மீட்பு!
- IndiaGlitz, [Monday,November 15 2021]
கடலூரில் ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்த மூவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் இருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எச்சரிக்கையை மீறி ஒரு சில இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம் அருகில் முள்ளிகிராம்பட்டு என்ற பகுதியை சேர்ந்த மூவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற மாதவன் மாளவிகா ஆகிய இரட்டையர்கள் மற்றும் லோகேஷ் என்ற 15 வயது சிறுவன் ஆகியோர் ஆற்றில் குளித்துக் கொண்டும், செல்பி எடுத்து விளையாடி கொண்டும் இருந்தபோது திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட மூவரில் இருவரது உடல் முட்புதரில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்த தீயணைப்பு துறையினர் அந்த இரு உடல்களை மீட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் இருவர் செல்பி மோகத்தால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.