3 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகிறதா? அதிமுக கொறடா பரிந்துரையால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,April 26 2019]
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததாகவும் டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோனது தெரிந்ததே. இந்த 18 தொகுதிகளுக்கும் கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் கள்ளக்குறிச்சி பாபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபால் அவர்களிடம் பரிந்துரை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சற்றுமுன் பேட்டியளித்த அதிமுக கொறடா ராஜேந்திரன், 'கள்ளக்குறிச்சி பாபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் மனு அளித்துள்ளேன். டிடிவி தினகரனோடு மூவரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அளித்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேற்கண்ட மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் முடிவை சபாநாயகர் தனபால் எடுத்தால் தமிழகத்தில் மேலும் மூன்று தொகுதிகள் காலியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.