மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா?
- IndiaGlitz, [Monday,May 03 2021] Sports News
கொரோனா பரவலுக்கு நடுவில் ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 30 ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனால் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலை அடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றி வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்யும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் சிஎஸ்கே வீரர்கள் எவருக்கும் கோரோனா இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து இருப்பதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். அதோடு இந்திய வீரர் அஸ்வின் மற்றும் நடுவர்கள் 2 பேரும் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி விட்டனர்.
தற்போது கொல்கத்தா அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கும் அதோடு சிஎஸ்கே அணியுடன் பணியாற்றி வந்த 3 பேருக்கும் கொரோனா நோய் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடத்தப்படுமா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.