ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

திருச்சியை சேர்ந்த 43 வயது சகாயராஜ் என்ற ஆட்டோ டிரைவருக்கு மனைவியும், முத்துலட்சுமி என்ற 25 வயது மகளும் உள்ளனர். இவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் வாடகை வாங்க வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியே பார்த்தபோது மூவரும் மூன்று சேலைகளில் தூக்கில் தொங்கியபடி மரணம் அடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கதவை உடைத்து மூன்று பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் சகாயராஜூக்கு ஒரு மகன் இருந்ததாகவும், சமீபத்தில் அவர் மரணம் அடைந்ததால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், மகனை பிரிந்த வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் சகாயராஜ் மரணத்திற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.